என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. (சங். 103:1)

சங். 150:6இல், ‘சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.’ என்று வாசிக்கிறோம். நாம் சுவாசிக்காமல் சில நொடிகள்கூட இருக்க முடியாது.

நமது ஆகாரத்திற்காகத் துதிக்க வேண்டும். மத். 15:36இல் நமது ஆண்டவர் இயேசு, அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு ..., கொடுத்த ஆகாரத்திற்காகத் துதிக்கிறார். எனவே, நாமும் நமது ஆகாரத்திற்காகக் கர்த்தரைத் துதிக்க வேண்டும்.

மருத்துவமனையில் போய்ப் பார்த்தால் பச்சிளங் குழந்தை முதல் மிக வயதான முதியோர் வரை சுவாசிக்கப் போராடுகிறார்கள். உலகில் ஆகாரம் இல்லாத பல இலட்சக் கணக்கானோர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்தும் வியாதியின் நிமித்தம் உணவு அருந்த முடியாதோர் உண்டு. ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள சுவாசம், உணவு, ஆரோக்கியத்திற்காக தேவனைத் துதிக்க வேண்டும்.

ஆவிக்குரிய சுகம், உணவு, ஆரோக்கியம் இவையும் இன்றியமையாதது. சபையில், பிற நற்செய்திக் கூட்டங்களில் கேட்கும் செய்திகள், வேத வாசிப்பு, 2 பேர், 10 பேர், 50 பேர் கூடி ஜெபித்தல் போன்றவற்றால் ஆவிக்குரிய சுகம், உணவு மனமகிழ்வு கிடைக்கும்.

இது மாத்திரமல்ல சமாதானக் குறைவு, பெலவீனங்கள், சோர்வுகள், கவலை, கண்ணீர் துதித்தலினால் மாறும். தாவீது ராஜா, சங். 34:1இல் ‘கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்’ என்கிறார்.

மோசேயின் கையிலிருந்த கோல் ஜீவனற்றது. ஜீவனுள்ள தேவனுக்காக ஜீவனுடையதானது. அது அற்புதம் செய்தது. 2தீமோ. 3:16ல் வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது. யோவான் 6:63 வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்று உள்ளது. நாம் செய்யும் துதியிலுள்ள வசனங்கள் உயிருள்ளவை.

சிறிதாயினும், பெரிதாயினும், அறிந்தாயினும், அறியாமையினாலும், துணிந்தாயினும், தவறியாயினும், பாவம் பாவமே. அது ஆத்தும அழிவு. தம் ஜீவியத்தில் ஏதேனும் சிறு பிழைகள் ஏற்பட்டால் நம்மைத் தாழ்த்தி, ஆண்டவரிடம் அறிக்கை பண்ணி ஜெபிக்க வேண்டும். சாலமோன் ராஜா, 1 இரா. 8:46இல் ‘பாவம் செய்யாத மனுஷன் இல்லையே’ என்கிறார். இயேசுவானவர் சிலுவையில் மூன்று ஆணிகளில் தொங்கி, பாடுபட்டு, இரத்தம் சிந்தி, நம் பாவங்களுக்காக மரித்து நம்மைப் பாவமற இரட்சித்தார். அதை நினைவு கூர வேண்டும். சங். 33:1 சொல்வது துதி செய்வது செம்மையானவர்களுக்குத் தரும். எனவே தேவனைத் துதிப்போம்.

ஆகமங்களில் துதியின் முதல் வசனம் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்; இறுதி வசனம் முட்செடியில் எழுந்தருளினவருடைய தயை - தேவனது படைப்புகளில் தொடங்கி கோத்திரப் பிதாக்களில் இறுதியானவர்களாகிய பெஞ்சமின் யோசேப்பின் ஆசீர்வாதங்களோடு முடிகிறது. கடவுளும், இஸ்ரவேலரும் ஒன்றில் ஒன்றாய் ஒன்றி கடவுள் மனிதரை நேசித்த உயர்வைச் சொல்வது ஆகமங்களின் துதி.

வேதத்தைப் படித்து மறைநூல் அறிவை வளர்த்துக் கொள்வது போல ஆகமங்களில் துதி நூலைப் படிப்பதன் மூலம் இஸ்ரவேலர் வரலாற்றைப் பற்றி ஒரு (Outline) கோடிட்டுக் காட்டுதல் நமக்குக் கிடைக்கும்.

தினமும் துதித்தால் மனதில் உற்சாகம் பெருகும். வாட்டும் கவலை நீங்கும். உள்ளத்தின் வெறுமை ஒழியும். தேவன் நம்மோடு கூட எப்போதும் இருக்கிறார் என்ற உணர்வு இருளில் ஒளிரும் நட்சத்திரமாய் ஒளி கொடுக்கிறது.

 



முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top