இஸ்ரவேல் மக்கள் பாலை நிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்குச் சற்றுமுன், அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பாக 'இணைச்சட்டம்' என்று பொருள்படும் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலில் தரப்பட்டுள்ள செய்திகளாவன:

  1. கடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை இஸ்ரவேல் மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையில் பாலைநிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.
  2. பத்துக்கட்டளைகளையும், சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறுத்துகிறார். மேலும், வாக்களிப்பட்ட நாட்டில் இஸ்ரவேலரின் வாழ்க்கைத்தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.
  3. அவர்களோடு கடவுள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார்.
  4. இஸ்ரவேல் மக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இஸ்ரவேல் குலங்களுக்கு ஆசி வழங்கியபின், யோர்தான் ஆற்றுக்கு கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.

கடவுள் இஸ்ரவேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர்தம் மக்களும் நினைவில் கொண்டு அவர்மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வுபெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக் கருத்து ஆகும். கட்டளைகளுள் முதன்மையானது எது?' என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலில் (6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.

குறிப்பு: எபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்) பன்மையும் (நீங்கள், உங்கள்) கலந்து காணப்படுகின்றன. ஆயினும், இந்நூலில் பொருள் இலக்கண அமைப்பிற்கேற்ப அவை முறைப்படுத்தப் பட்டுள்ளன.

1.   மோசேயின் முதல் பேருரை 1:1 - 4:49
2.   மோசேயின் இரண்டாம் பேருரை 5:12 - 6:19
 பத்து கட்டளைகள் 5:1 - 10:22
 சட்டங்கள், நியமங்கள், எச்சரிப்புகள் 11:1 - 26:19
3.   கானான் நாட்டில் நுழைவதற்கான அறிவுரைகள் 27:1 - 28:68
4.   உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 29:1 - 30:20
5.   மோசேயின் இறுதி மொழிகள் 31:1 - 33:29
6.   மோசேயின் இறப்பு 34:1-12

  1. ‘நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று இஸ்ரவேல் ஜனங்கள் பலுகிப் பெருகும்படி மோசேயைக் கொண்டு ஆசீர்வதித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 1:11)
  2. ‘ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டு போவது போல இஸ்ரவேலரை தேவனாகிய கர்த்தர் சமந்து கொண்டு வந்ததற்காக’ தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 1:31)
  3. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே இருந்தால் நமக்கு ஒன்றும் குறைவுபடாது என்பதை தெளிவுபடுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 2:7)
  4. நீர் எங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நாங்களாக ஒன்றும் கூட்டவும் கூடாது; அதில் ஒன்றையும் குறைக்கவும் கூடாது என்று உம்முடைய ஜனங்களுக்குக் கட்டளையிட்ட எங்கள் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 4:2)
  5. நம் முழு இருதயத்தோடும், நம் முழு ஆத்துமாவாடும் கர்த்தரைத் தேடும் போது அவரைக் கண்டடையலாம் என்பதை மோசேயின் மூலம் சொன்ன கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 4:29)
  6. ‘உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிற படியால் அவர் உன்னை கைவிடவுமாட்டார். உன்னை அழிக்கவும் மாட்டார்’ என்று மோசேயின் மூலம் ஆறுதல்படுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 4:31)
  7. ‘என்னிடத்தில் அன்பு கூர்ந்து என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவனாயிருக்கிறேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 5:10)
  8. ‘சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்’ என்று உம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 7:14)
  9. ‘சகல நோய்களையும் தம் ஜனங்களை விட்டு கர்த்தர் விலக்குவார்’ என்பதற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 7:15)
  10. ‘நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்திற்காக அவரை ஸ்தோத்தரிக்கக் கடவாய்’ என்று உம்முடைய ஜனங்களுக்குக் கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 8:10)
  11. இதோ வானங்களும், வானாதி வானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும் நம் தேவனாகிய கர்த்தருடையவைகள். தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 10:14)
  12. நம்முடைய தேவனாகிய கர்த்தர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல. பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 10:17)
  13. தேவனாகிய கர்த்தர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ் செய்கிறவரும் அந்நியன் மேல் அன்பு வைத்து அவனுக்கு அன்ன வஸ்திரம் கொடுக்கிறவருமா யிருக்கிறார். கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 10:18)
  14. நம் பிதாக்கள் எழுபது பேராய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ நம் தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப் போலாக்கினார். கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 10:22)
  15. ‘நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசமோ மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம். அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கிற தேசம்’ என்று தம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கப் போகிற தேசத்தைக் குறித்து கூறிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 11:11)
  16. ‘அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்’ என்று தம் ஜனங்களின் தேசத்தின் மீது தாம் வைத்திருக்கும் கரிசனையை வெளிப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 11:12)
  17. ‘நீ உன் தானியத்தையும், திராட்சை ரசத்தையும், உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு நான் ஏற்ற காலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும், பின் மாரியையும் பெய்யப் பண்ணுவேன்’ என்று ஆசீர்வதித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 11:14, 15)
  18. ‘நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து இவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக’ என்று உம்முடைய ஜனங்களுக்கு கட்டளையிட்ட தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 11:19, 21)
  19. ‘உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்’ என்று உம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 11:24)
  20. ‘உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை’ என்று தைரியப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 11:25)
  21. ‘உன் கோத்திரங்களில் ஒன்றில் கர்த்தர் தெரிந்து கொள்ளும் இடத்தில் மாத்திரம் நீ உன் சர்வாங்க தகன பலியிடு’ என்று உம் ஜனங்களுக்குக் கட்டளையிட்ட தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 12:14)
  22. ‘நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக’ என்று உம் ஜனங்களை சந்தோஷப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 12:18)
  23. ‘இரத்தத்தை மாத்திரம் புசியாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. இரத்தமே உயிர். மாம்சத்தோடே இரத்தத்தையும் புசிக்க வேண்டாம்’ என்று எச்சரித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 12:23)
  24. ‘நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள்’ என்று உம் ஜனங்கள் யார் என்பதை வெளிப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 14:2)
  25. ‘நான் உண்டு பண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும் புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன்’ என்று உம்முடைய ஜனங்களை எந்த நிலையில் வைக்க சித்தம் கொண்டிருக்கிறீர் என்பதைச் சொன்ன கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 26:19)
  26. ‘நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்’ என்று உம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 28:6)
  27. ‘நீ அநேக ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்’ என்று உம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 28:12)
  28. ‘மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்’ என்ற உம்முடைய ஜனங்கள் உம்மைக் குறித்த இரகசியத்தை புரிந்து கொண்டதற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 29:29)
  29. ‘நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள் ... உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடு கூட வருகிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்று மோசேயைக் கொண்டு உம்முடைய ஜனங்களத் திடப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 31:6)
  30. ‘மழையானது இளம் பயிரின் மேல் பொழிவது போல் என் உபதேசம் பொழியும். பனித்துளிகள் புல்லின் மேல் இறங்கவது போல என் வசனம் இறங்கும்’ என்று உம்முடைய வசனங்களின் இயல்பை வெளிப்படுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 32:2)
  31. ‘அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது. அவர் வழிகளெல்லாம் நியாயம்’ என்று உம்மைப் பற்றி மோசே கூறியதற்காகக் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 32:4)
  32. ‘கர்த்தருடைய ஜனமே அவர் பங்கு. யாக்கோபு அவருடைய சுதந்திரம்’ என்று மோசே உம்மைப் பற்றித் தெளிவுபடுத்தியதற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 32:9)
  33. ‘கர்த்தாவே அவன் சம்பத்தை ஆசீர்வதித்து அவன் கைக்கிரியையின் மேல் பிரியமாயிரும்’ என்று மோசே தன் கடைசி நாட்களில் ஜெபித்ததற்காகக் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 33:11)
  34. பென்யமீனைக் குறித்து ‘அவன் கர்த்தருக்குப் பிரியமானவன். அவன் அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்’ என்று மோசே ஆசீர்வதித்ததற்காகக் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 33:12)
  35. ‘முட்செடியில் எழுந்தருளினவரோடே தயை யோசேப்புடைய சிரசின் மேலும் தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின் மேலும் வருவதாக’ என்று மோசே ஆசீர்வதித்ததற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (உபா. 33:16)

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.



முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top