இந்த ஆகமம், விடுதலைப் பயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கியக் கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலையை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பஸ்கா நிகழ்ச்சியை யாத்திராகமம் என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.

ஆண்டவராகிய கடவுள், இஸ்ரவேல் மக்களைத் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி. தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள்தான் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரவேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப் படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.

1.   இஸ்ரவேலர் எகிப்தினின்று விடுதலை பெறல் 1:1 - 15:21
 எகிப்தில் அடிமைத்தனம் 1:1 - 22
 மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும் 2:1-25
 மோசேயின் அழைப்பு 3:1-4:31
 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல் 5:1-11:10
 பஸ்கா - எகிப்தினின்று வெளியேறல் 12:1-15:21
2.   செங்கடல் முதல் சீனாய் மலை வரை 15:22 - 18:27
3.   பத்துக் கட்டளைகள் - உடன்படிக்கை நூல் 19:1 - 24:18
4.   உடன்படிக்கைக் கூடாரம் - வழிபாட்டு ஒழுங்கு முறைகள் 25:1 - 40:38

  1. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார். அதற்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (யாத். 2: 25)
  2. ‘நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்’ என்று உத்தரவாதம் அருளிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (யாத். 3: 6)
  3. எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் நான் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியர் கைக்கு விடுதலையாக்கவும் அவர்களை பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் என்ற தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 3: 7-8)
  4. ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று மோசேயிடனே சொல்லி 'இருக்கிறேன்' என்று உம் நாமத்தைச் சொன்னவரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 3: 14)
  5. ஜனங்கள் விசுவாசித்தார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும். அவர்கள் படும் உபத்திரவத்தைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும் அவர்கள் கேட்ட போது தலை குனிந்து தொழுது கொள்ள வைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 4: 31)
  6. கர்த்தர் மோசேயை நோக்கி, ‘நான் சர்வ வல்லமையுடைய தேவன் என்னும், நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானேன்’ என்று மோசேயிடம் கூறி தைரியப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 6: 1-3)
  7. ‘புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக. இந்த நாளில் தான் நான் உங்கள் சேனைகளை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினேன். ஆகையால், உங்கள் தலைமுறை தோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்களாக’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 12: 17)
  8. இஸ்ரவேல் புத்திரரை அணிஅணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 12: 57)
  9. அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக் கூடும்படிக்கு பகலில் அவர்களை வழிநடத்த மேக ஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்ற கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 13: 21)
  10. ‘பயப்படாதிருங்கள், நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காணும் எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் என்று ஜனங்களை நோக்கி மோசேயை சொல்ல வைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 14: 13)
  11. ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருப்பீர்கள்’ ஜனங்களை நோக்கி மோசேயை சொல்ல வைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 14: 14)
  12. மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்து போயிற்று. இந்த அற்புதத்தை செய்தவரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 14: 21)
  13. கர்த்தரே யுத்தத்தில் வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம் என்று தைரியப்படுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 15: 3)
  14. கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும் துதிகளில் பயப்படத்தக்கவரும் அற்புதங்களைச் செய்பவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 15: 11)
  15. சதா காலங்களிலும் என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுகிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (யாத். 15: 18)
  16. ‘கர்த்தரைப் பாடுங்கள். அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார். குதிரையையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார்’ என்று மிரியாமைப் பாட வைத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 15: 21)
  17. ‘என் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து என் நியமங்கள் யாவையும் கைக்கொண்டால் நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்னேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’ என்று உம் ஜனங்களை தைரியப்படுத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 15: 26)
  18. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வானத்து அப்பமாகிய மன்னாவை புசிக்கக் கொடுத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 16: 15, 31)
  19. அமலேக்கியர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்த போது, மோசேயை மலையுச்சியிலே தேவனுடைய கோலைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கச் செய்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 17: 9)
  20. யோசுவாவை அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக் கருக்கினாலே முறிய அடிக்க வைத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 17: 13)
  21. நான் எகிப்தியருக்குச் செய்ததையும் நான் உங்களை கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து, உங்களை என்னண்டையில் சேர்த்துக் கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். சகல ஜனங்களிலும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும், பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று கூறின கர்த்தாவே ஸ்தோத்திரம். (யாத். 19: 4-6)
  22. உம்முடைய சமூகத்தில் வருகிற ஆசாரியர்களும், நீர் அவர்களை சங்காரம் பண்ணாதபடி அவர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 19: 22)
  23. ‘நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 20: 24)
  24. மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு யேகோவா நிசி என்று பெயர் சூட்ட வைத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 21: 15)
  25. ‘வழியில் உன்னைக் காக்கிறதற்கும் நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும் இதோ நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 23: 20)
  26. ‘என் தூதனானவர் உனக்கு முன் சென்று ஏமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், எவியரும், ஏபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக் கொண்டு போவார். அவர்களை நான் அதம் பண்ணுவேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 23: 23)
  27. ‘உன் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக் கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 23: 25)
  28. மோசேயும், ஆரோனும், நாதாபும், அபியூவும் இஸ்ரவேலில் எழுபது பேரும் ஏறிப் போய் இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின் கீழே நீலக் கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும், தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது. தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 24: 9-10)
  29. மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு பட்சிக்கிற அக்கினியைப் போல இருந்தது. மகிமையான தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 24: 17)
  30. அவர்கள் நடுவே நீர் வாசம் பண்ண உமக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்கக் கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 25: 8)
  31. ‘குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை ஊற்ற வேண்டும் … ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் மட்டும் அந்த விளக்கை எரிய வைக்கக் கடவர்கள்’. இதை இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாகக் நியமித்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 27: 20-21)
  32. ‘இஸ்ரவேல் புத்திரர் நடுவே நான் வாசம் பண்ணி அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்’ என்ற சொன்ன கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 29: 45)
  33. விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கு யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலயேவைப் பேர் சொல்லி அழைத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 31: 2-3)
  34. இஸ்ரவேல் புத்திரரைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தாவே, உம்முடைய ஓய்வு நாட்களை ஆசரிக்கக் கட்டளையிட்டதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 31: 13)
  35. சீனாய் மலையில் நீர் மோசேயோடே பேசி முடித்த பின் உம்முடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை மோசேயினிடத்தில் கொடுத்தீரே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 31: 18)
  36. இஸ்ரவேல் ஜனங்களுக்காக மோசே பரிந்து பேசிய பொழுது உமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு பரிதாபம் கொண்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 32: 11-14)
  37. மோசே தீவிரமாக தரை மட்டும் குனிந்து பணிந்து கொண்டு ‘ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததானால் எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும்’ என்றதற்காய் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 34: 8-9)
  38. வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும் போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ண புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால் அது எழும்பும் நாள் வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள். அப்படி ஒரு தேவ வழிநடத்துதலை உம்முடைய ஜனத்திற்குக் கொடுத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (யாத். 40: 36-37)


முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top