பரிசுத்த வேதாகமத்தில் முதற்கண் இடம் பெறும் இந்நூல் தொடக்க நூல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூல் இஸ்ரவேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகிறது.

இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் கர்த்தரே ஆவார். கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான். ஆயினும் தேவன் மனிதன்மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.

அனைத்து மானிடரையும் மீட்குமாறு, தேவன் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவருடைய வம்ச வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பதை இந்நூல் விரித்துரைக்கின்றது. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை கர்த்தர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப்பெறுகின்றது.

1.   உலகையும் மனித இனத்தையும் கர்த்தர் படைத்தல்
2.   மனிதனின் வீழ்ச்சி - துன்பத்தின் தொடக்கம்
3.   ஆதாம் முதல் நோவா வரை
4.   நோவாவும் வெள்ளப்பெருக்கும்

  1. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 1:16)
  2. தேவன் நீந்தும் ஜீவஜந்துக்களையும், பறக்கும் பறவைகளையும், . மகா மச்சங்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்து அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 1: 20-22)
  3. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 1: 27)
  4. தேவன் மனுஷனையும், மனுஷியையும் ஆசீர்வதித்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 1: 28)
  5. தேவன் ... தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 2: 3)
  6. புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் என்று சொன்னதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 2: 24)
  7. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 4: 4)
  8. ஏனோக்கு முந்நூறு வருடம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 5: 22)
  9. கர்த்தருடைய கண்களில் நோவாவுக்குக் கிருபை கிடைத்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 6: 8)
  10. தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 8: 1)
  11. நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றை பலிபீடத்தின்மேல் தகனபலிகளாய்ப் பலியிட்டதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 8: 20)
  12. தேவன் நோவாவிடம், நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 9: 7)
  13. வானவில் கர்த்தருக்கும், புமியின் மேலுள்ள சகல வித மாம்ச ஜீவன்களுக்கும் கர்த்தர் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளமாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம். (ஆதி. 9: 13-15)
  14. ‘நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ’ என்று ஆபிராமை நோக்கிக் கர்த்தர் கூறியதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 12: 1)
  15. ‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்’ என்று ஆபிராமை ஆசீர்வதித்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 12: 2)
  16. பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் ஆபிரகாமுக்கு உள்ளாக ஆசீர்வதிக்கப்படும் என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 12: 3)
  17. கர்த்தர் ஆபிராமை நோக்கி, உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 13: 14-16)
  18. மெல்கிசேதேக்குக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 14: 20)
  19. கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து, நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு, உன் சந்ததி இவ்வண்ணமாக இருக்கும் என்று ஆசீர்வதித்ததற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 15: 5)
  20. ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணியதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 15: 6)
  21. ஆபிரகாமுக்கு 99 வயதானபோது, ஆபிராமுக்குக் கர்த்தர் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்று பிரகடனப்படுத்தியதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 17: 1)
  22. ‘நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்’ என்று ஆபிராமின் பெயரை ஆசீர்வாதமான பெயராக மாற்றிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 17: 5)
  23. ஆகாரின் கண்களைத் திறந்து, அவளை ஒரு தண்ணீர்த் துரவைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 21: 19)
  24. ‘பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்’ என்று தம்முடைய தூதன் மூலமாக ஆபிரகாமிடம் பேசிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 22: 12)
  25. ஆபிரகாம், ஈசாக்கைப் பலிகொடுக்கச் சென்ற இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டது. அதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 22: 14)
  26. கர்த்தர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் ஆபிரகாமை விட்டு நீக்கவில்லை என்று எலியேசர் அறிந்து சொன்னதற்காகக் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 24: 27)
  27. ‘கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்’ என்று ஆபிரகாமுக்குத் தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை நேரில் கண்டு எலியேசரைப் பட்டியலிட வைத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 24: 35)
  28. ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்த கிருபைக்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 25: 11)
  29. யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்து நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருந்ததற்காய் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 25: 27)
  30. ஈசாக்கு அந்த தேசத்தில் விதை விதைத்தான். தேவன் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலனை அடைந்ததற்காகக் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 26: 12)
  31. ‘நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடே கூட இருந்து என் ஊழியக்காரனாகிய ஆபிரகாம் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன்’ என்று ஈசாக்குக்குத் தரிசனமாகிச் சொன்ன தேவனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 26: 24)
  32. பெயர்செபா என்ற ஊரில் ஈசாக்கின் வேலைக்காரர்களைத் துரவு வெட்டி தண்ணீர் காணச் செய்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 26: 32, 33)
  33. ஈசாக்கு, ‘தேவன் உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமையையும் கொடுத்து மிகுந்த தானியத்தையும், திராட்சை ரசத்தையும் தந்தருள்வாராக... ‘ஜனங்கள் உன்னை சேவிக்கவும், ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள். ‘உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய். ‘உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்’ என்றெல்லாம் யாக்கோபை ஆசீர்வதிக்கச் செய்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 27: 28, 29)
  34. ‘நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்த தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரப் பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை’ என்று யாக்கோபுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 28: 15)
  35. அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து தூணாக நிறுத்தி, அதன் மேல் எண்ணெய் வார்த்து அந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிட்டான். அதற்காய் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 28: 18, 19)
  36. ‘கர்த்தர் எனக்கு தேவனாக இருப்பார்’; ‘நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்’; ‘தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்கு தசம பாகம் செலுத்துவேன்’ என்றெல்லாம் யாக்கோபை பொருத்தனை பண்ணிக் கொள்ள வைத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 28: 21, 22)
  37. ‘நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன். இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களை உடையவனானேன்’ என்று தேவன் தன்னை ஆசீர்வதித்ததை யாக்கோபு கர்த்தரிடம் பணிவுடன் கூறி வேண்டிக் கொள்ளச் செய்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 32: 10)
  38. ‘நான் சர்வ வல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக’ என்று தேவன் யாக்கோபை நோக்கி கூறியதன் மூலம் தம்முடைய வல்லமையை விளங்கச் செய்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 35: 11)
  39. யோசேப்போடே இருந்து, அவனைக் காரிய சித்தி உள்ளவனாக்கிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 39: 2)
  40. இஸ்ரவேலை, தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்டு பெயர்செபாவுக்குப் போகச் செய்து தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிடச் செய்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 46: 1)
  41. சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை என்றதற்காய் ஸ்தோத்திரம். (ஆதி. 49: 10)
  42. ‘யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்’ என்ற ஆசீர்வாதத்திற்காய் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (ஆதி. 49: 22)


முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top