காலம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருக்கிறது. ஒரு மனிதன் தன் கடந்த நாட்களில் எவ்வளவு இழக்கிறானோ, அதனைப் பன்மடங்கு அதிகமாக்கி, அவனுடைய நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் காலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நம்பிக்கை நிறைந்த சொற்களில்தான் நம் வாழ்வு நகர்ந்து கொண்டு இருக்கிறது.

'இழப்பு' என்ற சொல், நம் எவ்லோருடைய வாழ்விலும் நம் அனுமதி இன்றியே பங்கெடுத்துக் கொள்கிறது. நம்மில் சிலருக்குத்தான் இழப்பைக் கடந்து செல்லும் மனம் வாய்த்திருக்கிறது. உண்மையில் அவர்கள் பாக்கியவான்கள்.

எங்களுடைய மூத்த மகன் ரூபன். பிறந்து 11 மாதத்தில் ‘டிப்தீரியா’ என்னும் நோயால் மறைந்துவிட்டான்.

அந்த காலகட்டத்தில் ‘டிப்தீரியா’ நோய்க்கான மருந்து இல்லை.

அருப்புக்கோட்டையிலிருந்து மதுரைக்கு இரவு 10:30 மணிக்கு கடைசி பஸ். நேரம் கடந்துவிட்டது. மதுரை அரசு மருத்துவமனை போவதற்காக காலை 4:30 மணிக்கு புறப்படும் முதல் பேருந்தில் ஏறி, 6:00 மணிக்கு மதுரை பேருந்து நிலையம் வந்து இறங்கினோம்.

அங்கேயே எங்கள் மகன் உயிர் பிரிந்தது. நாங்கள் இருவரும் கதறிய கதறல் ஆண்டவருக்குக் கேட்டிருக்கும். அடுத்த ஆண்டே ஒரு மகன் பிறந்தான்.

தங்கையா போதகரம்மாள் குழந்தையைப் பார்க்க வந்த போது, “உங்கள் முதல் பையன் இறந்த போது நீங்கள் மிகவும் அழுதீர்கள். உங்களுக்கு ஆறுதலாய் கடவுள் இன்னொரு மகனைக் கொடுத்திருக்கிறார். இவன் உங்களுக்கு பர்னபா (ஆறுதலின் மகன்)” என்று சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்.

பர்னபாஸ் படித்து முடித்து, வாலிபனாகி அருகில் உள்ள நரிக்குடியில் ஆசிரியராக வேலை பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது அவனுக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது. தினமும் இன்சுலின் ஊசி போடவேண்டிய சூழ்நிலை.

இந்நிலையில் அவன் மதுரைக்குச் சென்றிருந்த பொழுது, மூன்று நாட்கள் தொடர்ந்து இன்சுலின் ஊசி போட முடியாமல் போய், மாரடைப்பு ஏற்பட்டு மரித்து விட்டான். எங்கள் துக்கம், வலி, வேதனை சொல்லி மாளாது. ஆனாலும் ‘சகல ஆறுதலின் தேவன்’ எங்களுக்குத் துணை நின்று தேற்றினார்.

என் கணவர் ஆரம்ப காலத்தில் வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்தார். அப்பொழுது துறைவாரியான ஏழு தேர்வுகளை எழுதினார். அவற்றுள், இந்திய சட்டங்கள் சம்பந்தப்பட்ட மிகக் கடினமான தேர்வும் ஒன்று. அதில் முதல் வகுப்பு மதிப்பெண் பெற தேவன் கிருபை செய்தார்.

இவைகளுக்குப் பின் வருவாய் ஆய்வாளர், துணை வட்ட ஆட்சியர், வட்ட வழங்கல் அதிகாரி, வட்ட ஆட்சியர் என்று படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்கள்.

தன் பணியில் மிகவும் கடினமாக உழைப்பவர்; நேர்மையாக இருப்பவர். அவர்களது சாந்த குணம், பொறுமை, எந்நிலையிலும் நிதானம், கடிந்து பேசாத மென்மையான சுபாவம் போன்ற இவரது இயல்பான குணங்களே இவரின் பணி மேன்மைக்கு அடித்தளமாக இருந்தது.

நான் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியை ஆகப் பணியாற்றி வந்தேன். மிகவும் முயற்சி எடுத்து, அதிக சிரமங்களுக்கு இடையே, சோர்வுறாமல் எம்.எட். படித்து முடித்து, அதே பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஆனேன். என் ஆசிரியப் பணியை சிறப்பாக முடிக்கத் தேவன் கிருபை பாராட்டினார். இவ்வளவு இழப்புகள் மத்தியிலும் வல்லமையான தேவனுடைய கரம் எங்களோடு இருந்தது. தேவன் எங்களை உயர்த்தினார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தேவ ராஜ்யம் சேர்ந்தார். 2 பெண் மக்கள் துணையுடன் கர்த்தரின் வழி நடத்துதலால் நான் வாழ்கிறேன்.

என் கணவர்தான் என் மிகப் பெரிய பலம். வயதான பிறகு அவர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். நடக்க முடியவில்லை; தேவையான மருத்துவ சிகிச்சை அளித்தோம். ஆனாலும் வியாதியின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. எட்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். வீட்டில் பதினோரு நாட்கள் படுக்கையில் இருந்தார். அவ்வளவுதான். கர்த்தர் எடுத்துக் கொண்டார்.

அந்தச் சமயம், அருட்திரு செல்வின் சாமுவேல் ஐயா அவர்களும், அருட்திரு டேவிட் ஜெபராஜ் ஐயா அவர்களும் உடன் இருந்தார்கள். அருப்புக்கோட்டையில் நடந்த என் கணவருக்கான இறுதி காரியங்களை அருட்திரு டி. பாஸ்கர் ஐயா அவர்கள் கவனித்துக் கொண்டார்.

நான் மிகவும் வேதனைப்பட்டபோது, ஒரு மகனைப் போன்றவரும், என் பெரிய பேத்தியும் என்னைத் தேற்றும் வகையில், “ஒரு வேளை இவர் சாப்பிட முடியாமல் படுக்கையிலேயே சுய நினவின்றி வருடக் கணக்கில் கிடந்திருந்தால் என்ன செய்வீர்கள்... கர்த்தருடைய நேரம் வந்தது... அவர் எடுத்துக் கொள்ளப்பட்டார்... வேதனைப் படாதீர்கள்...” என்று சொன்ன பிறகு சற்று ஆறுதல் அடைந்தேன்.

எங்கள் வாழ்க்கையில் அனேகக் காரியங்கள் அதிசயமாக நிகழ்ந்தது. சாட்சியாக நான்கு சம்பவங்களை மட்டும் இந்நூலில் எழுதியிருக்கிறேன்.


 
 
 
 
 
 
 
 


முன்னுரை அணிந்துரை ஆசிரியர் உரை-1 மாவும் எண்ணெய்யும்
பெருகியது
விதவையின் மகன்
உயிர் பெற்றது

ஆகாபும் எலியாவும் எலியாவும் காகங்களும் அக்கினியால் அற்புதம் ஆகாப்-யேசபேலும்
எலியாவும்
சுழல் காற்றில் எலியா
பரலோகம் சென்றது

ஆசிரியர் உரை-2 எங்கள் வாழ்வில்
அற்புதங்கள்
நன்றியுரை


Go to top